பணம் கேட்டு நிறுவன திறப்பு விழாவில் திருநங்கைகள் வாக்குவாதம்..! தொழிலதிபர்கள் குற்றச்சாட்டு! - ரூபாய் 5 ஆயிரம் போதாது ஒரு லட்சம் வேணும்
Published : Nov 7, 2023, 6:24 PM IST
தருமபுரி: புதிதாக அமைக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று (நவ.7) நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததோடு, அங்கிருந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வணிகர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தருமபுரியில் வணிக நிறுவனங்கள் புதிய கடைகள் திறந்தால் முதல் நாளிலேயே 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடி தங்களுக்குப் பணம் வழங்க வேண்டும் எனத் தொந்தரவு செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வணிக நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களாக இருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கேட்டு பணம் கொடுக்கும் வரை அப்பகுதியில் இருந்து வெளியேறாமல் மறுத்து விடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், யாரும் புதிய வணிக நிறுவனத்தில் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து தகாத வார்த்தைகளைப் பேசி புதிய வணிக நிறுவனங்களைத் தொடங்குபவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தருமபுரி பைபாஸ் சாலையில் துவங்கப்பட்ட புதிய வணிக நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த திருநங்கைகள், ரூ.5 ஆயிரம் கொடுத்தும் வாங்காமல் கூடுதலாகப் பணம் கொடுக்க வேண்டும் என வணிக நிறுவனத்திற்கு வெளியே நின்று கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தருமபுரி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருநங்கைகளை அப்பகுதியில் இருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.