கொடைக்கானல் போறீங்களா? இதை கவனித்துவிட்டு போங்க!
Published : Oct 22, 2023, 7:09 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும். தற்போது, சனிக்கிழமை முதல் வரும் செவ்வாய் வரை தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது கொடைக்கானலுக்கு வருகை புரிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் பிரதான சாலைகளான அப்சர்வேட்டரி சாலை, ஏரி சாலை, வத்தலக்குண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள், தூண் பாறை, பிரையன்ட் பூங்கா, உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா பகுதிக்குச் செல்ல முடியாமல் திணறினர்.
இதனைத் தொடர்ந்து, கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத்தலங்கள் அல்லாமல் உள்ள வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். இதனை முறைப்படுத்த வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா பகுதிகளில் தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கூடுதலாகப் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.