ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணி.. ஸ்தம்பித்த சென்னை! - அதிமுகவினர் பேரணியால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை:தமிழ்நாட்டில் சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள், மின்வெட்டு, முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் ரூ.30 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு ஆகிய முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதற்காக அதிமுக தொண்டர்களுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை சின்னமலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவியத் துவங்கினர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அங்கிருந்து அவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பதாகைகளுடன் பேரணி சென்றதால் சென்னையில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. சைதாப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.