சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை.. குற்றால வியாபாரிக்கு அபராதம்..
தென்காசி: குற்றாலம் பகுதியில் தற்போது சீசன் காலகட்டம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வருகை தந்து, குறைந்த அளவே கொட்டி வரும் குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர். குற்றாலத்திற்கு வருகை தரும் பெரும்பாலான பயணிகள் வெறுமனே குளிப்பதற்காக மட்டும் அல்லாமல் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காகவும் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் அங்கேயே தங்கி, தங்கள் குடும்பத்துடன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி மாமிசங்களை வாங்கி உணவுகளை சமைத்து உண்டு வருகின்றன.
ஆனால் இப்படி சுற்றுலா பயணிகள் வாங்கும் இறைச்சிகள் தரம் குறைந்து காணப்படுவதாகவும், ஒரு சில மாமிசங்கள் அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், குற்றாலம் அருகே மேலாகரம் பகுதியில் உள்ள மீன் கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செய்த சோதனையில், அந்த கடையிலிருந்த அனைத்து மீன்களும் அழுகிய, தரமற்று கெட்டுப்போன நிலையில் இருந்தது தெரியவந்தது.
மேலும், மீன்களை கெடாமல் வைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஐஸ் பாக்ஸ்களும், அதில் இருந்த ஐஸ் பார்களும் சுகாதாரமற்ற முறையில் இருந்த நிலையில், அதிலிருந்து ஐஸ் கட்டிகளை கொட்டி மீன்களில் பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்து கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், குற்றாலம் பகுதியில் இது போன்ற தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.