ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் - வெளியான அதிர்ச்சி வீடியோ! - Bodi Kottakudi River flood
Published : Nov 7, 2023, 10:24 AM IST
தேனி:தேனி மாவட்டம் போடி கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய டிராக்டரை, பொதுமக்கள் கயிறு கட்டி மீட்டனர். தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் சுற்றுப் பகுதிகளில் நேற்றைய முன்தினம் இரவு சுமார் 5 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் கொட்டகுடியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோப்புப்பட்டி கிராமத்தின் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றங்கரையில் உள்ள தென்னந்தூர் பகுதியில் தேங்காய் ஏற்றச் சென்ற புதூரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது டிராக்டர் ஒன்று, தரைப்பாலத்தில் கடந்து செல்லும் பொழுது வெள்ளத்தில் சிக்கி மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
டிராக்டர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, பின்னர் டிராக்டர் முழுவதும் ஆற்றில் மூழ்கிய நிலையில், கயிறு கொண்டு டிராக்டர் இழுக்கப்பட்டு தரைக்கு கொண்டு வரப்பட்டது. ஆற்றின் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு, எச்சரிக்கை மீறி தரைப் பாலத்தை கடந்து சென்றதால் டிராக்டர் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.