Cheyyar SIPCOT: மேல்மா-சிப்காட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி - மேல்மா சிப்காட் திட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்தில், மேல்மா-சிப்காட் (Cheyyar SIPCOT) திட்டத்தை கைவிட வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் தலைமையில் இன்று (ஜூலை 11) டிராக்டர் பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்தில் மேல்மா-சிப்காட் எனும் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களை 'தரிசு நிலம்' என்று கூறி மேல்மா, தேத்துறை, நர்மாபள்ளம், குரும்பூர், வட ஆளப்பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, அய்யவாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை முற்றிலுமாக தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி செய்யாறு பதிவாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சர்வே எண்களை சுவற்றில் ஒட்டி இருந்த எண்களைப் பதிவு செய்ய மாட்டோம் என்று அக்கிராமத்தினர் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, மாங்கால் சிப்காட்டிற்கு எடுத்த நிலத்தில் பாதிக்கும் மேல் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பல இடங்களில் சிப்காட்டிற்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படி விவசாய செய்யும் விளைநிலங்களை 'தரிசு' என்று பொய்க்கணக்கு காட்டி விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறிப்பது மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், இந்த விவசாய நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றினால் அனைவரும் கூலித் தொழிலாளியாக மாறும் அபாயம் ஏற்படும். ஆகவே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், இவ்வியக்கத்தை சேர்ந்த அருள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிலையில், மேல்மா - செய்யாறு இடையே 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக சென்று சிப்காட் சிறப்பு வட்டாட்சியர் லியாகத் அலியிடம் மனு அளித்தனர்.