பெங்களூரு கூட்டத்தில் ஸ்டாலின்தான் அர்ஜூனன் - சொல்கிறார் டி.ஆர்.பாலு..! - M K Stalin
சென்னை: தாம்பரம் சண்முகம் சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "பெங்களூருவில் எதிர்கட்சிகள் ஒன்றாக கூடும் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பாட்னா கூட்டத்தில் 15 கட்சிகள் பங்கேற்ற நிலையில் அதனை அமித்ஷா போட்டோ எடுப்பதற்காக கூடியது என்றார். ஆனால், அதன் தொடர்ச்சியாக தற்போது 23 கட்சிகள் வரையில் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்கலாம். அவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தால் பாஜகவை தூக்கி போடவும், தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய ஆட்சி அமையும் நிலையினையும் ஏற்படுத்தும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நவீன அர்ஜூனனாக செயல்படுவார். தமிழ்நாடு முதலமைச்சரின் வருகையை பெங்களூரு கூட்ட ஏற்பாட்டாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டு வருகிறார்கள். மேலும், என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "67 ஆண்டுகாலம் ஒரே இயக்கத்தில் பணியாற்றி பொதுவாழ்வில் ஈடுபட்ட எனக்கு இந்த நிலை வந்துவிட்டது என மிகவும் வருத்தமாக உள்ளது. நான் பல்வேறு முக்கியத் தலைவர்களுக்கு பதில் அளித்த நிலையில் தரம் தாழ்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேச விரும்பவில்லை" என்றார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, கம்பம் செல்வேந்திரன் மற்றும் மண்டலக்குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.