புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம்.. குற்றால அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - Ayyappan devotees
Published : Jan 1, 2024, 12:40 PM IST
தென்காசி: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம், தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. மேலும், அருவிகளில் கடந்த நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு, விடுமுறை தினமான இன்று (ஜன.01) உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குற்றால அருவிகளுக்கு வருகை புரிந்து, நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்து புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதால், ஏராளமான ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவியில் புனித நீராடிச் செல்கின்றனர்.
காலை முதல் குற்றால அருவி பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது. தற்போது அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் அனைவரும் உற்சாகத்துடன் அருவியில் குளித்துச் செல்கின்றனர். அருவி பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் அருவி கரையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.