மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி - தேனி சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - மேற்கு தொடர்ச்சி மலையில் மழை
தேனி : சுருளி அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்ததை அடுத்து, திரளான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்து உள்ளது. அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் இந்த சுருளி அருவி அமைந்துள்ளதால் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது. தற்போது தேனி மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்ததால், சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கி முற்றிலும் வறண்டு காணப்பட்டது.
சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், அருவிப் பகுதிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தனர். சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால், சுருளி அருவிக்குச் செல்லும் வனச்சாலைப் பகுதியில் குட்டிகளுடன் எட்டு காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சுருளி அருவியில் லேசான அளவு நீர் வரத் தொடங்கியது. மேலும் அருவி பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளும் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்ததால் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.
கோடை வெயிலின் உஷ்ணத்தைத் தவிர்க்க உள் மற்றும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வருகை தந்து உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.