ஓசோன் செறிவு மண்டலமான தரங்கம்பாடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - Mayiladuthurai
மயிலாடுதுறை:தரங்கம்பாடி கடற்கரை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு, 1306 ஆம் ஆண்டு மாசில்லாமணி நாதர் கோயில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது. டேனிஷ் குடியேற்றத்திற்குப் பின் 1620 இல், டேன்ஸ்போர்க் என்னும் பெயரில் கோட்டை ஒன்று கட்டப்பட்டது.
இவ்விரண்டும் இன்றளவும் இவ்வூர் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இங்கு, 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். தமிழ்நாட்டில் ஓசோன் காற்று, அதிகம் வீசும் கடற்கரை நகரமாக விளங்குகிறது.
இதனால் தரங்கம்பாடி கடற்கரையில் சாதாரண நாட்களிலும் மாலை நேரத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைவதை முன்னிட்டு, நேற்று மாலையில் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை தரங்கம்பாடி கடலோர காவல்படை போலீஸார் கண்காணித்து விசில் ஊதி அவர்களை வெளி வருமாறு கூறினர். மேலும், மாலை 6 மணிக்கு மேல் கடற்கரையில் பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை.