உதகையில் காண்போரைக் கவர்ந்து இழுக்கும் பச்சை ரோஜா.. சிம்ஸ் பூங்காவிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! - மலர் தொட்டி
Published : Oct 6, 2023, 10:42 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்ற ஒன்று. ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் கோடை விழா பழக் கண்காட்சியைக் காண, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கென்றே சிம்ஸ் பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில், பல வண்ணங்களினால் ஆன ரோஜா மலர்களும் அடங்கும். இந்நிலையில், கோடை சீசனில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரிய வகை மலர் நாற்றுக்கள் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் அடுக்கி வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பச்சை ரோஜாச் செடிகளும் நடவு செய்யப்பட்டது. தற்போது பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், இவற்றைக் காணும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும், பச்சை ரோஜாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிம்ஸ் பூங்காவிற்குப் படையெடுத்து வருகின்றனர்.