தொடர் விடுமுறையைத் தொடர்ந்து கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்..!
Published : Dec 24, 2023, 7:05 PM IST
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். குறிப்பாகக் கோடைக் காலத்தில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தாலும் இரண்டாம் சீசன் துவங்கி தற்போது நடைபெற்று வருவதால் கொடைக்கானலில் நிலவும் சீதோசன நிலையை அனுபவிக்கக் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவர்.
ஆனால் சமீபத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் புயல் மற்றும் கன மழையால் கடந்த இரண்டு வாரங்களாக, கொடைக்கானலுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரக் காலமாகக் கொடைக்கானலில் தொடர் மழை இருந்த நிலையில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது.
இதன் காரணமாகக் கொடைக்கானலில் உள்ள இயற்கைக் காட்சிகளான தூண்பாறை , பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கைக் காட்சிகள் ரம்மியமாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, பகல் நேரங்களில் இருக்கக்கூடிய வெயிலில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.