தொடர் விடுமுறை எதிரொலி; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தருமபுரி:பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தொடர் விடுமுறை காரணமாக இன்று காலையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வாகனங்களில் குவிந்ததால் வாகனங்கள் நிறுத்த வழி இல்லாமல் சாலை முழுவதும் சுற்றுலா வாகனங்களாக காட்சியளித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை தொடர்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வந்தபடி இருந்தனர். இதனால் ஒகேனக்கலில் காணும் இடமெல்லாம் மனிதர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்தும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்டப் பகுதிகளில் குளித்தும் பரிசல் பயணம் செய்தும் ஞாயிறு விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்தும், பணிச் சூழலில் இருந்தும் தங்களை விடுவித்துக்கொள்ள குடும்பத்துடன் ஒகேனக்கல் வந்தபடி உள்ளனர்.