புதுச்சேரியில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்; மாணவர்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..! - பொங்கல்
Published : Jan 15, 2024, 11:04 PM IST
புதுச்சேரி:தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்படும் இந்த பெரும் பொங்கல் நாளில் விளைநிலங்களில் விளைந்த புத்தரிசி, காய்கறிகளைச் சூரிய பகவானுக்குப் படைத்து வீட்டின் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு தை முதல் நாளில் பொங்கலிடுவது வழக்கம்.
இந்நிலையில் புதுச்சேரி உப்பளத்தில் இயங்கி வரும் ஒலாந்திரே தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை, துத்திப்பட்டு கிராமத்தில் உள்ளது. இங்குப் பொங்கல் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் பிரான்ஸ்,பெல்ஜியம் சுற்றுலாப் பயணிகள் 60க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து,மாலை அணிவித்து,தாரை தப்பட்டத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டுப் பொங்கல் பானையில் அரிசி,வெல்லம் என இட்டுப் பொங்கலோ..பொங்கல் என முழக்கமிட்டனர். தொடர்ந்து தொண்டு நிறுவன மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெளிநாட்டவர் கண்டு ரசித்ததுடன் தப்பாட்ட குழுவினருடன் சேர்ந்து ஆடினார்கள். வயது முதிர்ந்தவர்கள் மிக ஆர்வத்துடன் நடனமாடிய அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.