கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து! சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்!
தேனி:கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் நீர் நிலைகளைத் தேடி ஓடத் துவங்கியுள்ளனர். விடுமுறை காலம் தொட்டே நீர் நிலைகள் சூழ்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு, பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான, வட்டக்காணல் வெள்ளக்கிவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் அருவிக்கு நீர்வரத்து வந்து சேரும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த பரவலான மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. எனவே, நேற்று (மே 21) ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு கடும் கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாகவும், நண்பர்களாகவும் வருகை தந்து விடுமுறை தினத்தை, கோடை வெப்பத்தை தணிக்க உதவும் கும்பக்கரை அருவியில் செலவிடுகின்றனர்.
இதையும் படிங்க:நாங்களும் அவர்களும் ஒன்றா..? ஆளுநரிடம் ராணுவ வீரரின் மனைவி கோரிக்கை!