Kumbakkarai Falls: குளுகுளு கும்பக்கரை அருவியில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பெய்யாது போனதாலும், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாலும் அருவிக்கு வரும் நீர் மிகவும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க கும்பக்கரை அருவிக்குத் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்நிலையில் மிகவும் குறைந்த அளவில் அருவியில் நீர் வருவதால் வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து குளித்துச் சென்றனர்.
மேலும் அருவி பகுதியில் காத்திருந்து குளிக்கும் நிலை ஏற்பட்டதால், மேல் பகுதியில் தேங்கிருந்த நீரில் சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்யாது போனால் 10 நாட்களில் அருவிக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.