Kumbakkarai Falls: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை - water level increased in Kumbakkarai Falls
Published : Sep 2, 2023, 11:46 AM IST
தேனி:கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 1) மாலை முதல் இரவு 12 மணி வரை கனமழை பெய்தது.
இந்நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கவும், உள்ளே சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியில் நீர் வரத்து சீரானதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க உள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி தெரிவித்து உள்ளார்.
நீர் வரத்து சீரானதும் மீண்டும் கும்பக்கரை அருவியில் மறு அறிவிப்பு செய்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் தற்காலிகமாக அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விடுமுறை நாள் என்பதால், விடுமுறை தினத்தை கழிக்க கும்பக்கரை அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.