சாம்பாரில் செத்துக் கிடந்த எலி... ஊட்டி உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி! - நீலகிரி செய்திகள்
Published : Oct 14, 2023, 4:48 PM IST
நீலகிரி:உதகையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் எலி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வறுகிறது.
சாம்பாரில் எலி இறந்து கிடந்தது குறித்து ஓட்டல் மேலாளரிடம் கூறியும் அவர் அஜாக்கிரதையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. உணவகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விடுமுறையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் உணவருந்த சென்று உள்ளனர். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் சிறிய எலி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து ஹோட்டல் மேலாளரிடம் கேட்டபோது அவர் அஜாக்கிரதையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சுற்றுலாப் பயணி சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்த குமாரிடம் கேட்ட போது "வீடியோவில் பார்த்த வரை இது வெண்டைக்காயில் இருந்த புழு என்றும் எலி போல் தெரியவில்லை என்றும், இருப்பினும் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அதிகாரிகளின் அலட்சிய பதிலால் உணவகத்துடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதை உணர முடிவதாகவும், உதகைக்கு நம்பி வரும் சுற்றுலாப் பயணிகளின் உணவு தேவையை ஆரோக்கியத்துடன் இங்குள்ள உணவகங்கள் வழங்குவதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.