குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! - tenkasi district news
Published : Sep 23, 2023, 10:04 AM IST
தென்காசி:மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் ஏமாற்றம் அளித்தது.
மேலும் கடந்து சில தினங்களாகவே தென்காசி மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்பொழுது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்பொழுது சாரல் மழையும் பெய்து வருவதால் இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறையை கழிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து உள்ளதால் விழாக் கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது.
குற்றால மெயின் அருவியில் காலை முதலே மக்கள் கூட்டம் களைகட்டத் தொடங்கி உள்ளது. சாரல் மழையோடு ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குளிப்பதற்கு ரம்மியமான சூழல் நிலவுவதால் நல்ல அனுபவம் கிடைப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்பொழுது ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.