Coutrallam: இரவு நேர சாரலால் ஆர்ப்பரித்த அருவிகள்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி - குற்றால அருவி
தென்காசிமாவட்டம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளில் தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக குற்றால அருவிகள் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிகமாக கொட்டி வருகிறது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து மீண்டும் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனை அறிந்த சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி மக்களும் கூட்டம் கூட்டமாக குற்றாலத்திற்கு படையெடுத்து வந்துள்ளனர். மேலும் குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் குளிப்பதற்கு பலரும் ஆர்வத்துடன் குளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.