குன்னூரில் தொங்குபாலம் அமைக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் - நீலகிரி
நீலகிரி:சுற்றுலாத் துறை சார்பில் நீலகிரி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் அந்தந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் என்னென்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சரிடம் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்டப் பகுதிகளில் தற்போதுள்ள பூங்காக்கள் காட்சி முனைகளில் புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூரில் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் பகுதிகளில் தொங்கு பாலம் அமைத்து, அதிலிருந்து இயற்கை காட்சிகளை காணும் வகையில் விரைவில் அதற்கானப் பணிகள் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.