Tomato price: பழனியில் உச்சம் தொட்ட தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா? - tamilnews
திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து இருப்பதால் விலை கிடுகிடுவென அதிகரித்து விற்பனையாகி வருகிறது. அன்றாட சமையல் தேவைக்கு தக்காளி என்பது அத்தியாவசியமான தேவையாக உள்ளது. சமீபத்தில் தக்காளி விலை அதிகரித்துள்ள சூழலில் சில நாட்களாக ரூ.80 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டுவரப்பட்டநிலையில் அதன் விலை புதிய உச்சம் தொட்டது. பெரியப்பா நகர் தக்காளி மார்க்கெட்டில் இன்றைய மொத்த விலையாக தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி 1100 ருபாய்க்கும், ஆந்திரா தக்காளி 25 கிலோ கொண்ட பெட்டி 2500 ருபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது. மேலும் சில்லறை விற்பனையில் தக்காளியின் தரத்தைப் பொறுத்து 1 கிலோ 120 ரூபாய் முதல் அதிகபட்சமாக 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இல்லத்தரசிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.