ஈரோட்டில் ரூ.50 ஆயிரம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது! - லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி
Published : Oct 31, 2023, 10:37 PM IST
ஈரோடு:ராசாம்பாளையம் எஸ்.எஸ்.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் என்பவர், தென்றல் நகர் பகுதியில் விசைத்தறி கூடம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில், தான் நடத்தி வரும் விசைத்தறி கூடத்திற்கு அருகே இருக்கும் குடோனுக்கு கூடுதலாக 70 எச்பி மின் இனைப்பு கோரி வீரப்பன்சத்திரம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.
இந்நிலையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகம் மற்றும் உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகிய இருவரும், கூடுதல் மின் இணைப்பு வழங்க இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு உள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகசுந்தரம், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததுள்ளார்.
அதன் அடிப்படையில், மின் வாரிய அதிகாரிகள் இருவரும் லஞ்சமாக பணம் பெறும் போது கையும் களவுமாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். மேலும் கூடுதல் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.