இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் - சிறையை முற்றுகையிட்ட தமுமுக!
கோயம்புத்தூர்:பல ஆண்டுகளாக சிறையில் உள்ள குறிபிட்ட சில இஸ்லாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யாமல் வைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இவர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, பதாகைகள் ஏந்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா, “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டலம் சார்பாக, நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 37 இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். பல்வேறு முன் விடுதலை அறிவிப்புகள் பல காலமாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு விடுதலை செய்துள்ளனர்.
இதற்கு முன் விடுதலை செய்த போது, குறிப்பிட்ட 37 இஸ்லாமியக் கைதிகளை மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. எனவே முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 37 இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றோம். மேலும் அவர்களின் விடுதலை ஒரு மாத காலத்திற்குள்ளாக நடைபெற வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொட்ர்ந்து ஆளுநரின் செயல்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதியற்றவர். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக முதல்வர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதம் அமைந்திருக்கிறது” என காட்டமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், “பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் எதிர்க்கட்சி கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. அடுத்த முன்னெடுப்பாக பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க கூடிய வகையில் 2024 தேர்தல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.