திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீப கொப்பரை! - tiruvannamalai Annamalaiyar Temple
Published : Nov 25, 2023, 11:36 AM IST
திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 10ஆம் நாள் திருவிழா நாளை (நவ.26) நடைபெற உள்ளது. அதன்படி, நாளை அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபமும், பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் ஏற்றப்படும் பஞ்ச லோகத்தால் உருவாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த, சுமார் 5 அடி உயரமுள்ள தீபம் ஏற்றும் கொப்பரை, திருவண்ணாமலை கோயிலின் கிளி கோபுரம் அருகே உள்ள நந்தி சிலை முன்பு, சிறப்பு பூஜைகள் செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீபம் ஏற்றும் கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு சென்ற பகதர்கள், தங்களின் பக்தி பொங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்று துதி பாடிய படியே, பஞ்ச லோகத்தால் உருவாக்கப்பட்ட மகா தீபம் ஏற்றும் கொப்பரையை, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சிக்கு தூக்கிச் சென்றனர்.