பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சியளிக்கும் திருவண்ணாமலை தீபம்! - annamalaiyar temple thirukarthigai deepam
Published : Nov 29, 2023, 12:25 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவ.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கி, கடந்த 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த நவ.26-ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபமானது ஏற்றப்பட்டது. இவ்வாறு ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்படும். மூன்றாம் நாளான நேற்று மாலை ஏற்றப்பட்ட மகா தீப ஜோதியானது தற்போது பனி மூட்டத்திலும் ஜோதிப் பிழம்பாக எரிந்து காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து 11 நாட்கள் மகா தீப தரிசனம் முடிந்த பிறகு, மலை உச்சியில் உள்ள கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு, பல்வேறு மூலிகைகள் சேர்த்து தீப மை தயார் செய்யப்படும். அந்த மையை ஆருத்ரா தரிசனத்தின்போது, நடராஜப் பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்டு, அதன் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.