தமிழ்ப்புத்தாண்டு - அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் பவனி - tamil new year 2023
தமிழ்ப் புத்தாண்டு தினம், இன்று உலகமெங்கும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி இன்று (ஏப்ரல் 14) தங்கத் தேர் பவனி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அதேநேரம் அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கத் தேரினை அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளில், கட்சி பிரமுகர்கள், கோயில் நிர்வாகத்தில் கட்டணம் செலுத்தி, கோயிலின் உள் பிரகாரத்தில் அதனை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று அதிகாலை, அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கத் தேர் அலங்கரிக்கப்பட்டு, அந்த தேரில் சந்திரசேகர் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தங்கத்தேரினை வடம் பிடித்து இழுத்து, கோயிலின் உள் பிரகாரத்தில் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தந்தனர்.