நெல்லையப்பர் கோயிலில் துவங்கியது ஆனித்தேரோட்ட விழா: கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்! - tamilnadu police department
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில். சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.
மேலும், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக இது விளங்குகிறது. சுமார் 2000ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் பல சிறப்புகளைப் பெற்றது. வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெற்றாலும் ஆனி மாதத் தேரோட்டம் தான் மிகவும் பிரசித்திபெற்றது. ஆனி தேரோட்ட திருவிழா என்பது நெல்லையப்பர் கோயிலில் மிகச் சிறப்பான திருவிழாவாகும். இந்நிலையில் ஆனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நெல்லையப்பர் கோயில் சந்நிதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
முன்னதாக கொடி மரத்திற்குப் பல்வேறு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. சந்தனம், பன்னீர், திருநீறு, தேன், இளநீர் உள்ளிட்டப் பல்வேறு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து தேர் முன்பு, பந்தக்கால் நடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனத்தை மேற்கொண்டனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை இருவேளையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும், வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜூலை 2ஆம் தேதி ஒன்பதாம் திருவிழாவான தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ளது.
தேர்த் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுப்பார்கள். மேலும், இதனை முன்னிட்டு நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.