குருபெயர்ச்சி 2023: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம்! - Tuticorin news
தூத்துக்குடி :அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறந்த குரு தலமாக விளங்குகிற இங்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குரு பகவான் நேற்று (ஏப்ரல் 22) இரவு 11.27 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனதை அடுத்து, சிறந்த குரு தலமாக விளங்கக் கூடிய திருச்செந்தூர் முருகன் கோயிலில், இன்று சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடரந்து, மற்ற பூஜைகளும் வழக்கம் போல் நடைபெற்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.