முதுமலையில் 2023-2024ஆம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது! - today latest news
Published : Nov 29, 2023, 2:04 PM IST
நீலகிரி:முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கியது. கால் தடயங்கள், எச்சம் போன்றவற்றை வைத்தும், தானியங்கி கேமராக்கள் மூலமாகவும் புலிகளைக் கணக்கெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆண்டுதோறும் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தானியங்கி கேமராக்கள் மூலம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் மசினகுடி, தெப்பக்காடு, கார்குடி, முதுமலை மற்றும் நெலாக்கோட்டை உள்ளிட்ட பாகம்-III உள்மண்டல வன சரகங்களில் தானியங்கி கேமராக்கள் மூலமாக 2023 - 2024ஆம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுக்கும் பணி 28.11.2023 முதல் தொடங்கி 06.01.2024 வரை நடைபெற உள்ளது.
மேலும், இந்த கணக்கெடுக்கும் பணியானது புலிகளின் கால் தடயங்கள், எச்சம் போன்றவற்றை வைத்து மட்டுமல்லாது, 5 உட்கோட்ட வனச் சரகங்களில் உள்ள மொத்தம் 191 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலிகள் கணக்கெடுக்கும் பணியானது தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.