'காந்தா ஞானும் வாராம்... திருச்சூர் பூரம் காணான்' - திருச்சூர் பூரம் கொண்டாட்டம்!
கேரளா:கேரளாவின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று திருச்சூர் பூரம் திருவிழா. கோடையில் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இத்திருவிழா உலக அளவில் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவைக் காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு திருச்சூர் பூரம் திருவிழா, கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. பூரம் நாளான இன்று(ஏப்.30) காலை வடக்குநாதன் கோயிலைச் சுற்றியுள்ள பத்து கோயில்களில் இருந்து யானைகள் ஊர்வலமாக, வடக்குநாதன் கோயிலுக்கு வந்தன. அதன் பின்னர், பஞ்ச வாத்தியங்கள் முழங்க யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
வண்ணமயமான குடைகளுடன் பிரமாண்டமான யானைகள் கலந்து கொண்டன. குறிப்பாக கேரளாவின் புகழ்பெற்ற யானையான தெச்சிக்கொட்டுகாவு ராமச்சந்திரன் யானை பங்கேற்றது. தெச்சிக்கொட்டுகாவு ராமச்சந்திரனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதைத் தொடர்ந்து பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாணவேடிக்கை இன்று நள்ளிரவில் நடைபெற உள்ளது. நள்ளிரவு முதல் நாளை காலை வரை இந்த வாணவேடிக்கை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ''வாராரு வாராரு அழகர் வாராரு..'' - வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!