300 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய பாம்பன் கடல்..! - tamilnadu news
Published : Dec 16, 2023, 9:42 PM IST
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் கடல் நீரானது 300 மீட்டர் தொலைவிற்கு உள் வாங்கியது. கடலுக்கு அடியிலிருந்த கடல் புற்கள், பாசிப் படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் தரைதட்டி நின்றன.
முன்னதாக, வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் ஓரிரு மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவி பகுதி முழுவதும் இன்று (டிச.16) காலை முதல் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகின்றது. மேலும், கடல் நீர் உள் வாங்கியதால் மணல் பரப்பு அதிகளவில் தென்பட்டது. கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையில் உள்ள மணல் பகுதி காணாமல் போய் வருகிறது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர் மற்றும் கடற்கரையானது சற்று பரபரப்பாகக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.