மகன் கைதை கண்டித்து தாய் தர்ணா.. கார் பானட்டில் தாயை ஏற்றிச் சென்ற போலீசார் சஸ்பெண்ட்! - மத்திய பிரதேசம்
போபால் : மத்திய பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மகனை கைது செய்ததை கண்டித்த தர்ணாவில் ஈடுபட்ட தாயை கார் பானட்டில் வைத்து காவல் நிலையத்திற்கு கொண்ட வந்த 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 2 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாய், தனது மகனை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், தன் மகன் அழைத்துச் செல்லப்படும் கார் முன் அந்த தாய் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். இருப்பினும், போலீசார் காரை அந்த பகுதியில் இருந்து நகர்த்திய நிலையில், தன் மகன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை காண முடியாத தாய், கார் முன்பக்க பானட்டில் தொங்கிய படி கூச்சலிடத் தொடங்கினார்.
பெண்ணை கார் முன்பக்க பானட்டில் ஏற்றியவாறு போலீசார், காவல் நிலையத்திற்கு வாகனத்தை செலுத்தினர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பெண்ணை கார் முன்பக்க கார் பானட்டில் ஏற்றிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.