ஆடி அமாவாசை : திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு! - புனித நீராடி சுவாமி தரிசனம்
தூத்துக்குடி: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொது மக்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், ஆண்டு முழுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடினர்.
கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம் உள்ளிட்ட பொருட்களுடன் வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட். 16) அதிகாலை 4 மணி முதலே கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடரந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.