சபரிமலையில் மண்டல பூஜை: கொட்டும் மழையை பொருட்படுத்தாது பக்தர்கள் சாமி தரிசனம்..! - சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதி
Published : Nov 22, 2023, 6:59 PM IST
கேரளா: உலகப் புகழ் பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக இந்த மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அந்த வகையில், 17ஆம் தேதி முதல் மண்டல காலம் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மண்டல பூஜைக்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், கார்த்திகை மாதம் முதலாம் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, பம்பையில் நீராடி ஐயப்பனை தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இதனால் இங்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கேரளா மாநிலம் சபரிமலையில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலைக்கு மலையேறி சென்று வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான பகுதிகளில் மழை பெய்வதால், அங்குள்ள நடைப் பந்தலில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் தரிசனத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
பலர் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பிரதான நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.