பண்ணாரி அம்மன் கோயிலில் விடிய விடிய நடந்த திருக்கம்பம் சாட்டுதல் வீடியோ! - Sathyamangalam
ஈரோடு:பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா துவங்கியது. விழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் உற்சவர் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிராமங்களில் திருவீதியுலா நிறைவுக்குப் பின் சப்பரம் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன் சப்பரம் தாரை தப்பட்டை முழங்கக் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. செவ்வாய்க்கிழமை விடிய விடிய திருக்கம்பம் சாட்டுதல் விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் முன் குழிக்கம்பம் ஏற்படுத்தப்பட்டது.
அப்போது திருப்பணி கமிட்டியினர் மற்றும் மலைவாழ் மக்கள் மரத்துண்டுகள் போட்டு தீ மூட்டினர். பின்னர் தீ மூட்டிய மரத்துண்டுகளுடன் சுற்றி வந்து குழி கம்பத்தில் போட்டதில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் குழிக்கம்பத்தை சுற்றி வந்து நடனம் ஆடினர். விடிய விடிய நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று முதல் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடு களியாட்டம் நடைபெறும். வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் 4ம் தேதி அதிகாலை குண்டம் விழாவுக்கு ஏற்பாடுகள் நடைபெறும். 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. இதில் லட்சணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.