தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவ நினைவு தினம்: முத்து நகர் கடற்கரைக்குப் பூட்டு - Thoothukudi sterlite issue
தூத்துக்குடி: கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்து நாளையுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனால் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (மே 21) தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஹரி ராகவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு இருந்தார். இந்த நிலையில் இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அனுமதி மறுத்ததுடன், மக்கள் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக முத்து நகர் கடற்கரையில் கூட வேண்டாம் என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், முத்து நகர் கடற்கரையில் சட்ட விரோதமாக கூடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் முத்து நகர் கடற்கரைப் பூங்கா அடைக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு, முத்து நகர் கடற்கரைப் பூங்கா முன்பு டிஎஸ்பி தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.