தெள்ளார் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - தெள்ளார்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள தெள்ளார் முத்தாலம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இந்தக் கோயிலில் இன்றைய தினம் (ஏப்ரல் 29) தேரோட்டத்தை முன்னிட்டு, முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ஒளிமிகு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபட்டனர். தொடர்ந்து தெள்ளார் முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, உற்சவர் முத்தாலம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தப்பட்டு, மேள தாளங்கள் உடனும், வான வேடிக்கை உடனும் தேரில் பவனி வந்தார்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக அம்மனுக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து வழிபட்டனர். இந்த நிகழ்வில் நாட்டாமைதாரர்கள் பாபு, ஆச்சால் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருண் உள்பட பலரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.