2 கோடி ரூபாயைத் தாண்டிய அண்ணாமலையார் கோயில் உண்டியல் வருமானம்! - திருக்கல்யாண மண்டபம்
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
வைகாசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திச் சென்றனர். இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலை(ஜூன் 28) வைகாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சுதர்சனம் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இப்பணியானது நேற்று காலை தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதில் 2 கோடியே 09 லட்சத்து 98 ஆயிரத்து 831 ரூபாய் மற்றும் 476 கிராம் தங்கமும், 1,376 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.