இருளில் படிக்க முடியாமல் தவித்த மாணவனுக்கு சோலார் பேனல் வழங்கிய தலைமை ஆசிரியர்! - today news
திருவண்ணாமலை: செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று (ஜுலை 15ஆம் தேதி) கல்வி கண் திறந்த காமராஜரின் 121வது பிறந்த நாள் விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளியில் துரிஞ்சாபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற பத்தாம் வகுப்பு மாணவன் தனது தாத்தாவின் வீட்டில் தங்கி இருந்து படித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்கனி மாலை நேரத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களின் படிப்பு சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பார்த்தசாரதியின் வீட்டிற்குச் சென்ற தலைமை ஆசிரியர், மாணவன் பார்த்தசாரதி குடிசை வீட்டில் காமாட்சி விளக்கின் வெளிச்சத்தில் படித்து வந்ததைக் கண்டுள்ளார்.
வீட்டில் லைட் இல்லாததைக் கண்டு வேதனை அடைந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் தாத்தாவிடம் இதுப்பற்றி கேட்டுள்ளார். அப்போது தங்களின் வீடு புறம்போக்கில் உள்ளதால் மின்சாரம் வழங்க மின்சார துறையினர் மறுத்து விட்டனர் என்றும் இதனால் தான் தனது பேரக்குழந்தை விளக்கின் வெளிச்சத்தில் படித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் சூரிய ஒளியின் மூலம் இயங்கும் சோலார் பேனல் மின்சார தொகுப்பினை கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை ஆசிரியர் வழங்கினார். தனது படிப்பிற்கு உதவியாக இருந்த தலைமை ஆசிரியருக்கு மாணவன் பார்த்தசாரதி மனம் உருகி நன்றி கூறினார்.