அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி - theerthavari
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஜூலை 8ஆம் தேதி ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடந்து 9 நாட்கள் காலை மற்றும் இரவில் சிவகாமி - உடனுறை நடராஜர் பெருமான் மாட வீதிகளில் வலம் வந்தனர்.
இந்த நிலையில், ஆனி பிரம்மோற்சவத்தின் 10ஆம் நாளான நேற்று (ஜூலை 17) அண்ணாமலையார் ஐங்குளக்கரையில் உள்ள ஐய்யங்குளத்தில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி மேற்கொண்டார். சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள் ஒலிக்க, அண்ணாமலையார் சூலத்தினை ஐய்யங்குளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரில் 3 முறை முழுகி தீர்த்தவாரி மேற்கொண்டனர்.
பின்னர் பால், தயிர், சந்தனம், இளநீர் மற்றும் பன்னீர் ஆகியவை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் ஆகியோருக்கு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.