தேசிய தடகளப் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி வெள்ளிப் பதக்கம்!
வேலூர்:பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி லக்னோவில் சமீபத்தில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழக அணியினர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இந்திய தடகளப் போட்டிகள் மே 28 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் சார்பில் 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் மாணவர்கள் எஸ்.தினேஷ், எஸ்.ஜெயக்குமார், ஆர்.சாய்பிரசாத், ஜி.லோகேஷ் ஆகிய நான்கு பேர் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
இந்த நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் ஆர்.ஏ.சி.சி.கே.எஸ்.தடகள சங்கம் சார்பில் இன்று (ஜூன் 3) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழக மாணவர்கள் பதக்கம் வென்றது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.