எஜமானுக்காக தினமும் உணவு எடுத்துச் செல்லும் நாய்: வைரலாகும் வீடியோ!
திருவள்ளூர்: பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில் வசித்து வருபவர் சுந்தர். இவர் தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கல்லூரிக்கு வேலைக்குச் சென்று வரும்பொழுது இவர் கூடவே அவருடைய சொந்த மகனாக வளர்க்கப்படும் ப்ளாக்கி என்ற நாயுடன் சென்று வருகிறார்.
இவருடன் செல்லும் ப்ளாக்கி, தன்னுடைய வாயில் அவருடைய உணவினையும் தனக்குத் தேவையான உணவையும் எடுத்துக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் தன் வாயினால், அதை கவ்வி எடுத்துச்செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அழகாய் தன் வாயினால் உணவுப் பையினை சுமந்து கொண்டு, தன் எஜமானருடன் வீரநடை போட்டுச் செல்கின்றது, இந்த ப்ளாக்கி. இவ்வாறு காலை, மாலை என இருவேளைகளிலும் செல்வதை அந்நாய் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அவ்வழியே செல்பவர்கள் இதைப் பார்க்கும் பொழுது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ப்ளாக்கியைப் பற்றி அதனுடைய எஜமான் சுந்தர் அவர்கள் தெரிவிக்கையில், ”இந்த ப்ளாக்கிக்காக என்னுடைய மனைவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன், ப்ளாக்கி 9 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து வருகிறது. ப்ளாக்கியும் நானும் ஒன்றாக வசித்து வருகிறோம். என்னுடைய செல்லக்குழந்தையாக நான் இதை வளர்த்து வருகிறேன். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான தருணம் இதனுடன் இருப்பது தான்” என்று அவர் தெரிவித்தார்.
செல்லப்பிராணியை தன்னுடைய உலகமாக நினைத்து வாழும் இவருக்கு சுந்தரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதையும் காண்க:அவர் இசையும், இவர் கவியும் கொள்ளையடிக்காத மனம் உண்டோ!