கும்பகோணத்தில் களைகட்டிய திருமுறை வீதியுலா; சைவத்திருமுறைகளாலான சிவ வடிவத்தை காண குவிந்த பக்தர்கள்
Published : Jan 7, 2024, 5:14 PM IST
தஞ்சாவூர்: 1948ஆம் ஆண்டு தருமை ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன், திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டம் துவங்கப் பெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் ஞாயிறுதோறும் தமிழ்நாடெங்கும் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, திருமுறைகளை ஓதி வழிபாடு செய்வது வழக்கம்.
இவ்வமைப்பின் 76ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு, கும்பகோணம் வியாழசோமேஸ்வரர் திருக்கோயிலில் அமையப் பெற்றுள்ள பஞ்சாக்கரக்கோயில் (சிவாய நம எனும் 5 எழுத்து மந்திரத்தை கையினால் நூல் ஒன்றுக்கு லட்சம் முறை எழுதப்பெற்ற 100 நூல்கள் அடங்கிய குறிப்பேட்டு பெட்டகம்) முன்பு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்ட 12 சைவத்திருமுறை நூல்களையும், இறைவன் திருமேனி போல சிவ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது.
மேலும் அத்திருவுருவ வடிவத்தை அழகாக அலங்கரித்து, மலர் மாலைகள் சூட்டி எழுந்தருளி, சிவனடியார்கள் அதற்கு சிவ பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமுறை பாராயணத்துடன் கும்பகோணம் வியாழ சோமமேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, சைவத்திருமுறை வீதியுலா தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலைச் சென்றடைந்தது.
பின்னர் அங்கு நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு, சிவ ரூபமாக தரிசனம் தந்த திருமுறைகளை தரிசித்தும், வேண்டுதல்களை பிராத்தனைகளாக வைத்தும் மகிழ்ந்தனர். இது போன்று சைவத்திருமுறை வீதியுலா நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.