புத்தாண்டு 2024; பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் விசேஷ திருக்கல்யாணம் கோலாகலம்! - new year
Published : Dec 31, 2023, 10:55 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகp பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான சோமகலம்பிகா சமேத பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த திருக்கோயிலில், 2024ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, உலக மக்கள் அனைவரும் தொற்று நோய் அச்சங்கள், இயற்கை சீற்ற இடர்பாடுகள் நீங்கி, நலமுடன் பல்லாண்டு காலம் வாழ, சிறப்பு பிரார்த்தனையுடன் ஆனந்தம் ஆண்டு முழுவதும் நிலைத்திருக்க, நன்மைகள் பல கூடி வர வேண்டியவை எல்லாம் விரைந்து நிறைவேறிட இறைவனின் நல்லருள் கிடைக்க வேண்டி, விசேஷ திருக்கல்யாணம் வைபவம் இன்று (டிச.31) நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்திற்கு முன்னதாக, திருக்கோயில் சன்னதியில் உற்சவர் பாணபுரீஸ்வரசுவாமி மற்றும் சோமகலம்பிகா அம்பாள் விசேஷ பட்டுடுத்தி அழகிய மலர்கள், மாலைகள் சூடிய நிலையில் எழுந்தருள, மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சீர்வரிசை சமர்ப்பித்தல் நிகழ்வும், நாதஸ்வர மேள, தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, யாகம் வளர்த்து, திருக்கல்யாண வைபவம் சோமகலம்பிகைக்கு மங்கள ஞான் அணிவிக்க சிறப்பாக நடைபெற்றது.
இதில், ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டன.