தமிழ்நாடு

tamil nadu

பழனியில் களைகட்டிய திருக்கல்யாணம்

ETV Bharat / videos

பழனியில் களைக்கட்டிய திருக்கல்யாணம்: காணக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 10:29 PM IST

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று (நவ.19) சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த (நவ.12) திங்கட்கிழமை காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.

ஒருவார காலம் நடைபெற்ற விழாவின் போது நாள்தோறும் அருள்மிகு சின்னக்குமாரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆறாம் நாள் நிகழ்ச்சியான நேற்று(நவ.18) அடிவாரம் கிரிவல வீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று(நவ.19) திருக்கல்யாணம் நடைபெற்றது.

மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மண மேடைக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்குப் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்குப் பட்டாடை, நறுமணமிக்க வண்ண மலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபசாரமும் நடைபெற்றது. மேளதாளம் முழங்கச் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details