தூத்துக்குடி பாகம்பிரியாள் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்..! - தூத்துக்குடி சிவன் கோயில்
Published : Nov 7, 2023, 5:59 PM IST
தூத்துக்குடி: நகரின் மையப்பகுதியில் சிவன்கோயில் என்றழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் சப்பர பவனியும் நடைபெற்றது.
தொடந்து பத்தாம் திருநாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் எழுந்தருள தேரோட்டத்தை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, சிவன் கோயில் அறங்காலர் குழு தலைவர் கந்தசாமி, ஸ்ரீ வைகுண்டபதி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏ. சி.செந்தில்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை இழுக்கும் போது பக்தர்கள் சிவகோசங்களை எழுப்பினர். தேரோட்டத்தின் போது வாத்தியங்கள், தேவார இன்னிசை, வேத பாராயணம், மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், மாணவ - மாணவிகளின் வீர விளையாட்டுகள், பஜனை ஆகியவையும் இடம்பெற்றன.
பக்தர்களுக்காக ஆங்காங்கே நீர், மோர் உள்ளிட்ட பானங்கள் விநியோகிக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி விழாக்கோலம் கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐப்பசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி வரும் 9-ஆம் தேதி இரவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.