அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: சிம்ம மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா! - Thiru Karthigai Deepam 3rd days festival
Published : Nov 20, 2023, 8:14 AM IST
திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகளவில் திருவிழாக்கள் நடந்தாலும், கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கப்பட்டது. இந்த பத்து நாட்களும் இரவு சாமி ஊர்வலத்தில் தினமும் ஒரு வாகனத்தில் வந்து வீதி உலா வருவது வழக்கம். அந்த வகையில், நேற்று 3ம் நாளை முன்னிட்டு இரவு உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாம் நாள் திருவிழா உற்சவத்தில் முதலில் விநாயகர், இரண்டாவதாக முருகர், மூன்றாவதாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், நான்காவதாகப் பராசக்தி அம்மன், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி பவனி வந்தனர். அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளிய காட்சியை ஆரியக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.