திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2ஆம் நாள்; வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா! - etv bharat tamil
Published : Nov 19, 2023, 6:53 AM IST
திருவண்ணாமலை:பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்குள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, திருக்கார்த்திகை தீபத் திருவிழா (Thiru Karthigai Deepam) மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் (நவ.17) அதிகாலையில், அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மேலும் 2ஆம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களில், கோயிலின் 16 கால் மண்டபத்தில் எழுந்தளினர்.
இதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர், முருகர், உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளின் மாடவீதியுலா நடைபெற்றது. அதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.