பெங்களூரில் பிஎம்டபிள்யூ கார் கண்ணாடியை உடைத்து ரூ.13.75 லட்சம் கொள்ளை.. வெளியான வீடியோ! - சர்ஜாபூர்
Published : Oct 24, 2023, 10:44 AM IST
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஆனேகல் அருகே உள்ள ஹொன்னகலச்புரத்தைச் சேர்ந்தவர், மோகன்பாபு. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி மதியம், நிலம் பதிவு செய்வதற்காக சர்ஜாபூர் துணை பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவருடைய பிஎம்டபிள்யூ சொகுசுக் காரில் பணப்பையை வைத்து பூட்டுவிட்டு, சார்பதிவாளர் அலுவலத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, மோகன்பாபு அருகில் இருந்த சார்ஜாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நோட்டமிட்டு யாரும் பார்க்காத நேரத்தில் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.13.75 லட்சம் பணப்பையை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் சாமர்த்தியமாக திருடும் காட்சி அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சர்ஜாபூர் போலீசார் அந்த இரண்டு மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.